வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, August 31, 2017

தினமும் செய்ய வேண்டியவை

இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சியில் நமது கைகளில் ஆறாவது விரலாய் இருப்பது அலைபேசி எனும் செல்போனே.
இதிலிருந்தே நாம் நமது அன்றைய பல அலுவல்களை அதிகபட்சமாக செய்கிறோம்.செய்ய கட்டயாப்படுத்தப்படுகிறோம்.
ஒரு சிலர் ஒருபடி மேலே போய் அலைபேசியிலேயே,சிரிப்பதும் அழுவதும்,கோபப்படுவதும்,விளையாடுவதும் அரங்கேறிப் போய் எங்கும் எப்பொழுதும் அலைபேசிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். மனித மனமே உணர்வுகளால் மட்டுமே வாழ்வை பயணித்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வுகளை நல்வழிப் படுத்த நாம் சில முயற்சிகளை அலைபேசியின் செயல்மொழிகளை கொண்டு நாம் தினமும் செய்யலாம். இதோ அவை :


1) சோகத்தை ~ Delete செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ Save செய்யுங்க
3) சொந்தங்களை ~ recharge செய்யுங்க
4) நட்புகளை ~ Download செய்யுங்க
5) எதிரிகளை ~ Erase செய்யுங்க
6) உண்மையை ~ Broad cast செய்யுங்க
7) துக்கத்தை ~ switch off செய்யுங்க
8) வேதனையை ~ Not reachable செய்யுங்க
9) பாசத்தை ~ In coming செய்யுங்க
10) வெறுப்பை ~ out going செய்யுங்க
11) சிரிப்பை ~ In box செய்யுங்க
12) அழுகையை ~ out box செய்யுங்க
13) கோபத்தை ~ Hold செய்யுங்க
14) இன்முகத்தை ~ send செய்யுங்க
15) உதவியை ~ ok செய்யுங்க
16) இதயத்தை ~ vibrate செய்யுங்க

-Arrow Sankar

  Print Friendly and PDF

Saturday, August 26, 2017

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு !

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு !

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;  
வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;
எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;
அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;
விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்;


திருமுறைகளில் விநாயகர்
'காணாபத்யம்என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதிஎன்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம்! முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமையும்.

ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என்று, 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார்.

விநாயகர் தரும் வரங்கள்
''துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று ஔவையார், விநாயகப் பெருமானை வேண்டி சங்கத் தமிழ்ப் பாடல்கள் பாடும் புலமை பெற்றார். விநாயகர் அகவலில் யோக தத்துவத்தையும், விநாயகர் தரும் இக, பர சௌபாக்கியங்களையும் பாடியுள்ளார். 'முன்னை வினையின் முதலைக் களைந்து, எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறுஎன்று போற்றுகிறார் ஔவையார்.
செல்வாக்கும் சொல்வாக்கும் தருவான், வெவ்வினையை வேரறுக்க வல்லான், நம் வேட்கை தணிவிப்பான் விநாயகன்.
'வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்ய தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவுஎன்கிறார் சேக்கிழார்.
விருத்தாசல புராணம், பாதாள விநாயகரின் பெருமைகளைப் பாடுகிறது. 'உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைதொழ வேண்டும்என்கிறது இந்தப் புராணம்.

விநாயக புராணம்
திருவாவடுதுறை ஆதீன கச்சியப்ப முனிவர் விநாயக புராணத்தை விரிவாகப் பாடியுள்ளார். இதில் விநாயகரின் தோற்றம், பெருமை, விரதங்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

விநாயகரை வணங்கும் பக்தருக்குத் துன்பமில்லை, வறுமை இல்லை, நோயில்லை, துக்கம், சோகம், மோகங்கள், பாவங்கள், பகைகள் எதுவும் இல்லை என்கிறது இந்தப் புராணம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்
பெண்கள் மட்டுமே விநாயகருக்குச் செய்யும் விரதபூஜை இது. ஆடிச் செவ்வாய் இரவு ஆண்கள் உறங்கிய பின்போ அல்லது ஆண்கள் இல்லாத ஒரு வீட்டிலோ பெண்கள் கூடி, நெல் குத்தி, அரிசியாக்கி, மாவாக்கி, உப்பில்லாது, இளநீரை விட்டுப் பிசைந்து உருண்டை ஆக்கி, நீராவியில் வைத்து எடுத்து, கன்று ஈனாத பசுவின் சாணத்தில் பிள்ளையார் செய்து, பூஜை செய்து, விடிவதற்குள் விரதம் முடித்து, காலையில் பிள்ளையாரை ஆற்றில் விட்டால் தாலி பாக்கியம் பெருகும், தன தான்யங்கள் வளரும் என்பது ஐதீகம்.

இது, விரத மகாத்மியம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள 46 விரதங்களில், விநாயகரின் அருள் கிடைக்கச் செய்யும் ஒரு விரதம் ஆகும்.

தெய்வநாயகன் விநாயகன்
கடவுளர்களே போற்றும் கடவுள், கணபதி! திரிபுரங்கள் எரிக்கச் செல்லுமுன் தந்தை சிவன் தன்னைப் போற்றி வணங்க மறந்ததால், 'அச்சிவன் உறைரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரன்விநாயகர்.

தம்பிக்கு வள்ளியை மணம் செய்து வைத்தவர்;
மதுகைடபர்களை வெல்ல மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்;
கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சம்பாசுரனை வெல்லவும், பிரத்யும்னனை மீட்கவும் துணை நின்றவர்;
நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாரையூரில் நிவேதனம் உண்டு, தரிசனம் தந்தவர்;
தில்லையில் திருமுறைகள் உள்ளதைக் காட்டி, 12 திருமுறைகளை மீட்டவர்.
விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையார்; திருச்சியில் உச்சிப் பிள்ளையார்; சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர்; திருந்துதேவன்குடியில் நண்டு பூசித்த கர்க்கடக விநாயகர்; திருவீழிமிழலையில் படிக்காசுப் பிள்ளையார். இவரை மணிமேகலை காப்பியம் 'கரங்கவிழ்ந்த காவிரிப்பானைஎன்று போற்றுகிறது.  

நோய் தீர்க்கும் விநாயகர்
பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான்.

திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது
'ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற்றினால்,
வாராத புத்தி வரும், பக்தி வரும், புத்திர சம்பத்து வரும், சக்தி வரும், சித்தி வரும்தான்
என்று புத்தி, சத்தி, சித்தி பெற விநாயகனைத் தொழச் சொல்கிறார்.

சுயக் கட்டுப்பாடு கொண்டவர் விநாயகர். ஐம்புலன்தன்னை அடக்கும் யானை கட்டும் கயிறு, அங்குசம் இரண்டையும் தானே கொண்டு, மோன நிலையில் தியானம் செய்யும் விநாயகர் யோகம், நாதம், தாளம், ஞானம் எல்லாவற்றையும் தரும் நர்த்தன யோக கணபதி ஆவார்.

லட்சுமி கணபதி காயத்ரி
28 எழுத்து மந்திரம்
'ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத
சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா

குடும்ப க்ஷேம காயத்ரி
'ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மீ கணபதயே
மம மம குடும்பஸ்ய யாவத்ராநாம் துரிதம்
ஹர ஹர க்ஷேமம் குருகுரு ஸர்வசௌபாக்யம்
தேஹி தேஹி ஐம்கம் கணபதயே ஸ்வாஹா

காரிய ஸித்தி காயத்ரி
'ஓம் க்லெளம் ஸ்ரீ ம் ஸர்வவிக்ன ஹந்த்ரே பக்தானுக்ரஹகர்த்ரே
விஜய கணபதயே ஸ்வாஹா
ஆல், அரசு, இலந்தை, வன்னி மர விநாயகரையும், அத்தி மரத்தின் விநாயகரையும் தொழுது பூசித்தால் முழுப்பலன் பெறலாம். வேழ முகத்தானைப் போற்றுவோம்; வெற்றி பெறுவோம்!

சங்கடஹர சதுர்த்தி விரதம்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடப்பது போல விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெறுகின்றது. மாதத்தில் தோன்றும் பௌர்ணமியை அடுத்து வரும் இந்தச் சதுர்த்தி தினம் மிகவும் விசேஷமானதாகும். சங்கடம் என்றால் "கஷ்டம்" என்று பொருள், ஹர என்றால் "அழிப்பது"என்று பொருள். கஷ்டங்களை அழித்து  இன்பத்தைத் தருவது தான் சங்கடஹர சதுர்த்தி.

காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் இந்த விரதம் மிகப்பழைமையானதும் சக்திவாய்ந்ததுமாகும்.
திருமணத் தடை நீங்க , தோஷங்கள் தீர, குழந்தை செல்வம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க, நோய்கள் குணமாக, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். குறிப்பாக கடன் தொல்லை தீரவும், பித்ருதோஷங்கள் நீங்கவும்  இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்ற விரதங்களைப் போல அல்லாமல் சதுர்த்தி விரதம் மட்டும் மாலை வேளையில் சந்திரன் உதயமாகும் தருணத்தில் திதி வேளையில் தூய்மையான மனதோடு பூஜை செய்ய வேண்டும். நாள் முழுவதும் பால், பழம் , பழச்சாறு போன்ற திரவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலுள்ள விநாயகருக்குப் பிடித்தமான  புன்னை, மந்தாரை, செவ்வரளி, வில்வம், மாதுளம்பூ, ஜாதிமல்லி, மகிழம்பூ, பாதிரி, சம்பங்கி, மாம்பூ, அரளி, பவளமல்லி, குருந்தை,கண்டங்கத்திரிப்பூ, தும்பை, ஊமத்தை, முல்லை, மாதுளம்பூ, கொன்றை, செங்கழுநீர், தாழம்பூ போன்ற  இருபத்தோரு மலர்களில் எவையேனும் ஒன்றைச் சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும்.

விநாயகருக்கு மிகவும் பிடித்த வில்வம் பழத்தையும் அவருக்குப் படைக்கலாம். வில்வமரத்தை வீட்டில் வளர்ப்பதினால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பார்கள். இதுமட்டுமல்ல ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், புண்ணிய நீர் ஆடிய பலனும் கிடைக்கும் என்பார்கள்.

அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று ஆர்ச்சனை செய்து , கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.
கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது நமது வேண்டுதலுக்கு துகுந்தாற் போல கீழேயுள்ள 21 இலைகளில் எவையேனும் ஒன்றைக் கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

1.  நியாயம் கிடைக்க - மாவிலை
 2.  வாழ்வில் இன்பம் கிடைக்க - வில்வம் இலை
 3.  இல்வாழ்க்கை இனிக்க - கரிசலாங்கண்ணி
 4.  கல்வியில் வெற்றி பெற - இலந்தை
 5.  பொறாமை நீங்கி பெருந்தன்மை பெருக - ஊமத்தை
 6.  வசீகரம் - நாயுருவி
 7.  தைரியம் , வீரம் விவேகம் பெற - கண்டங்கத்தரி
 8.  வாழ்கையில் வெற்றி பெற - அரளி
 9.  உயர்பதவி, நன்மதிப்பு  கிடைக்க - அரசு 
10. திருமணத்தடை விலகி நல்ல வரன் அமைய - தவனம்
11. இல்லற சுகம் பெற - மரிக்கொழுந்து
12. செல்வச் செழிப்பு பெற - நெல்லி
13. குழந்தை வரம் பெற - மருதம்
14. கடன் தொல்லையிலிருந்து விடுதலையடைய - அகத்திக்கீரை 
15. சொந்த வீடு, பூமி பாக்கியம் - ஜாதி மல்லி
16. ஞானம் , அறிவு , தன்னம்பிக்கை பெறுவதற்கு - துளசி
17. பேரும் புகழும் கிடைக்க - மாதுளை
18. கருவிலுள்ள சிசுவிற்கு பாதுகாப்பு  மற்றும் வம்ச விருத்தியடைய - எருக்கு
19. சகல வித பாக்கியங்களும் பெற - அருகம்புல்
20. அனைத்துச் சக்தியையும் தாங்கும் இதயம் பெற - தேவதாரு
21. இவ்வுலகில் வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்க - வன்னி 

Arrow Sankar Print Friendly and PDF

Friday, July 21, 2017

ஆடிமாதமும் தமிழரும்

மழை தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் சிலிர்க்கின்றன. சோம்பிக் கிடக்கும் ஆறுகள் புத்துணர்ச்சி கொள்கின்றன. புது வெள்ளம் பாய்கிறது. எங்கும் உற்சாகம் பொங்குகிறது. ஆடி பிறந்துவிட்டது.விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.

ஆடி, பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிச் சமவெளிப் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.


தைப்பொங்கல். தீபாவளி போன்ற சமய வழிபாட்டுப் பண்டிகையிலிருந்து ஆடிப் பெருக்கு மாறுபட்டது. இப்பண்டிகை ஒரு குடும்பத்திற்குள் அனுசரிக்கப்படுவதல்ல. இது சமூகத் திருவிழா. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்வார்கள். அதற்குப் படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வந்தனம் செய்வார்கள். புதுப் புனலில் நீராடி பூஜிப்பார்கள். இவை எல்லாம் ஆடிப் பதினெட்டாம் நாள் செய்யப்படுவதால் இது பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது.

ஆடி மாதம் இன்றைய தமிழ் மாதக் கணக்கின்படி நான்காம் மாதம். ஆனால் ஒரு காலகட்டத்தில் தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. அதன்படி ஆடி மாதம், முதல் அரையாண்டுக் காலம் முடிந்து அடுத்த அரையாண்டுக் காலத்தின் தொடக்கம். ஆண்டின் தொடக்கமான தைத் திருநாளைப் பொங்கலிட்டு வரவேற்பதுபோல அடுத்த அரையாண்டின் தொடக்கமான ஆடியும் கொண்டாடப்பட்டதுண்டு.

ஆடியில் வழிபாடு
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.

காவிடி டெல்டாவில் ஆடி பிறந்ததும் ஆரம்பாகிற விஷயங்களில் கோவில் திருவிழாக்களும் ஒன்று. பெரும்பாலும் எல்லா ஊர்களிலுமே ஒரு மாரியம்மன் கோவில் கண்டிப்பாக இருக்கும். மாரியம்மன் கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடத்தி பத்தாம் நாள் தீமிதி உற்சவம், அல்லது செடல் உற்சவம் விமரிசையாக நடந்தேறும். கொடியேறி திருவிழா முடியும்வரை ஊரில் இறைச்சிப் புழக்கம் இருக்காது. ஐந்து வயதுக் குழந்தை முதல் எண்பது வயதுப் பெரியவர் வரை எல்லா வயதினரும் தீ மிதிப்பதைக் காண ஆச்சரியமாக இருக்கும். சீர்காழி அருகேயுள்ள மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கடைவெள்ளியன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். அவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழி இறங்குவார்கள். மாரியம்மன் தவிர காளியம்மன், அங்காளம்மன், என்று எல்லா அம்மன் கோவில்களிலும் தவறாமல் திருவிழா நடைபெறும்.

ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாவை ஒட்டிக் கூழ் ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் ஆடி பஞ்ச காலமாக இருந்தது. அப்பஞ்சத்தை எதிர்கொள்ள ஊர்கூடி கூழ் ஊற்றிப் பகிர்ந்துண்டிருப்பார்கள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆடிக்கு முந்தைய சில மாதங்களில் மழையே இருக்காது என்பதால் அப்போது வறட்சி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்தச் சமயத்தில் ஊருக்குக் கூழ் ஊற்றும் பழக்கம் ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இன்று இது வெறும் சடங்காகக் கடைபிடிக்கப்படுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலும்கூடத் தமிழர்களால் கூழ் ஊற்றும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் கொடைத் திருவிழா கொண்டாட ஒரு காரணம் இருக்கிறது. அம்மாதம் காற்றுக் காலம் என்பதால் அக்காலத்தில் மக்கள் பயணத்தைத் தவிர்த்தார்கள். அதனால் அவர்கள் உள்ளூரிலேயே தங்க நேர்ந்ததால் அக்காலத்தை உள்ளூர்க் கோயில் திருவிழா நடத்துவதற்காகச் செலவிட்டார்கள். அப்படித்தான் ஆடி மாதம் திருவிழா நடத்துவது வழக்கமானது என்கிறது ஒரு சான்று.

கடந்த சில வருடங்களாகவே காவிரியில் தண்ணீர் வராமல் போய்விட்டது. ஆனாலும் மக்கள் பண்டிகையைக் கொண்டாடாமல் விட்டுவிடவில்லை. ஆற்றுக்குள் ஊற்று தோண்டி அதில் தண்ணீர் எடுத்துப் படையலை போட்டுவருகிறார்கள். கிருஷ்ணராயபுரம், முசிறி, குணசீலம், திருப்பாராய்த்துறை, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், திரூவளர்ச்சோலை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் என்று எல்லா ஊர்களிலும் ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும் மக்கள் கூடி காவிரித்தாயை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள். கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் இருக்கும் காவிரி துலாகட்டத்தில் ஆற்றுக்குள் அடிபைப் அடித்து அதில் நீர் பிடித்து காவிரித்தாயை வணங்கினார்கள்.
இந்தப் பதினெட்டு நாளுக்கும் மகாபாரப் போர் நடந்த பதினெட்டு நாளுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போர் முடிந்து பாவங்களைத் தீர்க்க ஆற்று நீரில் மூழ்கி எழுவதாகவும் ஐதீகம் உண்டு. ஆடி போர்க்களமான மாதம் என்பதால்தான் இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் தரித்திரம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தெய்வ காரியங்களுக்கான மாதம் என்பதால் ஆடியில் திருமணச் சடங்குகள் தவிர்க்கப்படுகின்றன. அதுபோல புதுமணத் தம்பதியர் தாம்பத்தியத்தில் ஈடுபதுவதும் தவிர்க்கப்படுகிறது.

தமிழர்கள் புரட்டாசி, மார்கழியிலும் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஆடி மாதத்தில் மற்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. திருமாங்கல்யம் பெருக்குதல் என்னும் சடங்கு இம்மாதத்தில்தான் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது தாலி பிரித்துக் கட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலிக் கயிற்றைக் களைந்து புதிய தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்ளும் சடங்காகும்.

ஆண்டின் மற்ற நாட்களில் பேரிக்காய் என்று ஒன்று இருப்பதையே நினைவில் கொள்ளாத மக்கள் ஆடிப்பெருக்கு தினத்துக்கு மட்டும் எங்கிருந்தாலும் தேடிச்சென்று பேரிக்காயை வாங்கி வந்துவிடுவார்கள். பேரிக்காய் இல்லாமல் படையலே நடக்காது. அன்றோடு பேரிக்காய் கண்ணிலிருந்து காணாமல் போய்விடும். பேரிக்காய் அளவுக்கு முக்கியத்துவம் அவல்பொரிக்கும் உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே ஊறவைத்த அரிசியை எடுத்துக்கொண்டுபோய் அதை வறுத்து அவலாக கொடுக்கும் கடைகளில் நிற்கும். காலையில் போனால் மாலையில்தான் வறுத்தெடுக்க முடியும். அவ்வளவு கூட்டம் அலைமோதும். ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு முன்னேறுவார்கள். தலைக்குமேல் வெய்யில் ஆளைக் கருக்கும். ஆனாலும் அசராமல் அவல் பொரித்து வெற்றிப் பெருமிதத்துடன் திரும்புவார்கள்.

ஆடிப் பெருக்கை ஒட்டி இன்னொரு சுவையான விஷயமும் உண்டு. இந்நாளில் காவிரி ஆறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணாகப் பாவிக்கும் சடங்கும் வழக்கத்தில் உள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பிற்குச் செய்யும் புளியோதரை, மாங்காய்ச் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வெல்ல சாதம் இவை எல்லாவற்றையும் ஆற்றில் படையலிடுகிறார்கள்.

திருவிழாக்களுக்கு மத்தியில் ஆடித் தள்ளுபடி இம்மாதத்தில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்த வியாபாரக் கொண்டாட்டங்கள் தொடங்கிய காலகட்டத்தை அறிய முடியவில்லை. ஆடி மாதம் வியாபாரம் படுமந்தமாக நடக்கும் காலகட்டம். ஏனெனில் இம்மாதத்தில்தான் விவசாயத் தொழில்கள் தொடங்கும். மக்கள் உழவுத் தொழில்களுக்காக முதலீடு செய்வதால் பணத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். மேலும் இம்மாதத்தில் திருமணச் சடங்கு எதுவும் மேற்கொள்ளப்படாததால் வியாபாரம் மந்தமாகவே இருக்கும். அதைச் சரிக்கட்டவே ஆடி மாதம் தள்ளுபடி தந்து விற்பனையைப் பெருக்க வியாபார நிறுவனங்கள் முனைந்தன. இதுதான் ஆடித் தள்ளுபடியின் பின்னணி.

ஆடிப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அறுதி என ஆடியின் சிறப்பு நீண்டுகொண்டே போகிறது. இம்மாதம் கொண்டுவரும் முதல் மழையின் மண்வாசமும், வானம் பார்த்த பூமியும் பூத்துக் குலுங்கும் வண்ணமும், உழுத நிலத்தில் தூவிய விதைகள் முளைவிடும் காட்சியும் ஆடியை இன்னும் சிறப்பானதாக மாற்றுகின்றன.

இப்படி ஈரமும் பசுமையும் தெய்வீக மணமும் கமழும் ஆடியைக் கொண்டாட ஆடி மாதம் ஒன்று போதாது.

குறிப்பு : எங்கோ படித்தது பிடித்தது பதிவிட்டேன்.

  Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms