Wednesday, December 13, 2017

முத்திரைகள் -1

முத்திரை - விளக்கம்
முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸமஸ்க்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு காரணப் பெயர். முத் என்ற வினைச் சொல் மகிழ்வூட்டும், மனநிறைவளிக்கும் என்று பொருள்படுவது. த்ரா என்ற பதத்துக்கு விரைந்து வெளியேற்றுதல் என்று பொருள். எனவே, தேவதைகளுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதுவும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதும் ஆன கிரியைக்கு முத்ரா என்பதாகக் காரணப் பெயர் அமைந்துள்ளது.


முத்திரைகளின் பெருமையை விளக்கிக் கூறும் ச்லோகங்கள் இவ்வாறு கூறுகின்றன: எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும், பாவத் தொடர்பைப் போக்குவதாலும் அவை முத்திரை என்று பெயர் பெறுகின்றன. முத்திரைகள் எல்லாக் காமங்களையும் (இன்பம்) (தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்பதே அறம், பொருள், இன்பம், வீடு என்றாகிறது), அர்த்தங்களையும் (செல்வம்), கூட்டுவிப்பதாகும். தந்த்ரங்களில் கற்பிக்கப்பட்ட முத்திரைகளைக் காட்டுவதால், மந்த்ர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள். அர்ச்சனை, ஜபம், த்யானம் முதலியவற்றின் போதும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப்பரதிஷ்டை , ரக்ஷணம், நைவேத்யம், முதலிய கிரியைகளின்போதும், அந்தந்த (பூஜா) கலபங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் காண்பிக்க வேண்டும்.


முத்திரைகளைப் பற்றிய சில விளக்கங்களை நம்மில் பலருக்குப் பரிச்சயமான ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண முறையை ஒரு உதாரணமாகக் கொண்டு காண்போம்.

மனனத்தால் (ஜபிப்பதனால்) ஸாதகனைக் (ஜபிப்பவனைக்) காப்பவை (மநநாத் த்ராயதே ) மந்திரங்கள் பலவகை: ஓர் அக்ஷரம் உள்ளவை பிண்டம்; இரண்டு அக்ஷரம் உள்ளவை கர்த்ரீ; மூன்று முதல் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டவை பீஜம்; ஒன்பதுக்கு மேல் அக்ஷரங்கள் கொண்டவை மந்த்ரங்கள்.

மந்திரங்கள் அனாதியானவை. இறைவனோடு மூச்சுக் காற்றென ஒன்றியவை. அவற்றை மானஉஷ சக்திகள் உருவாக்கவில்லை. அவை பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ரிஷிகள் மந்திரங்களை முதலில் கண்டறிந்து, அவற்றின் சக்தியை உணர்ந்து, உலக நன்மைக்காக அவற்றை வெளியிட்டவர்கள். ஒரு மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கும் முன் வலக்கையால் சிரஸ்ஸைத் தொட்டு, அந்த மந்திரத்தைக் கண்டறிந்து சொன்ன முனிவரை நினைவு கூர்ந்து, அவரை வணங்குவதாகப் பாவனை செய்வதுதான் குரு ந்யாஸம். இவ்வாறு சிரஸ்ஸைத் தொடும் செய்கை ஒரு முத்திரை.

மந்திரம் அமைந்துள்ள சொற்கட்டுக்கு (சந்தத்திற்கு) சந்தஸ் என்று பெயர். அதற்கு வணக்கம் செலுத்துவதே சந்தஸ் ந்யாஸம் என்பது, சந்தஸ்ஸை நினைவு கூர்ந்து, உதட்டின் மேல் வலது கையால் தொடும் முத்திரையே சந்தஸ் ந்யாஸம்

அந்தந்த மந்திரத்துக்கு உரிய தேவதையை இதயத்தில் அமர்த்துவதாகப் பாவித்து இதயத்தைத் தொடுவது தேவதா ந்யாஸம்.

மந்திரம் என்பது, மரம் போன்று பலன் தரும் வரிந்த சக்தி வடிவம். இதன் விதை போல, கருவாக, இதன் சூக்ஷ்ம சக்தி அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள சொல் வடிவமே பீஜம். அந்த பீஜத்தில் அடங்கியுள்ள வீர்யமே சக்தி. சக்தி தேவையின்றி வேறிடத்தில் செல்லாமல், அதனைப் பிணைத்து வைத்திருக்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் என்ற மாலா மஹா மந்திரத்துக்கு ஐம் என்பது பீஜம்; ஸெள: என்பது சக்தி; க்லீம் என்பது கீலகம்; (இந்த ஐம் ஸெள: க்லீம் என்ற மூன்று அக்ஷரங்களும் சேர்ந்து ஸ்ரீ பாலா மந்திரம் என்ற தனிப் பெயரும் பெற்றுள்ளன). ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணத்துக்கு முன்னால் ந்யாஸம் செய்யும்போது, இந்த அக்ஷரங்களைச் சொல்லி, அங்கங்களைத் தொட்டு, அங்கு அவை நிலைத்திருப்பதாக பாவனை செய்கிறோம். இந்த கிரியைகள் பீஜ ந்யாஸம், சக்தி ந்யாஸம், கீலக ந்யாஸம் எனப்படும். எந்த உறுப்புகளை எவ்வாறு தொடவேண்டும் என்பது அவரவரது குரு போதித்த ஸம்ப்ரதாயத்தைப் பொறுத்தது.
இவ்வாறே விநியோக ந்யாஸம், கர ந்யாஸம், அங்க ந்யாஸம் முதலியனவும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறியவற்றால் () மந்திரங்கள் உச்சரிக்கும்போது, முத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டென்பதும், () அந்த முத்திரைகளும் குரு பரம்பரைக்கு ஏற்ப பேதங்களாகும் என்பதும் பெறப்படும். அதே வகையில்தான், மந்திரங்களை ப்ரயோகித்து சிவாலய பூஜா கிரியைகள் நடக்கும்போது, பல வகையான முத்திரைகளுக்கு அக்கிரியைகளில் முக்கியத்துவம் தரப்படுகின்றது. அவற்றை சிவாச்சாரியார்கள் பயிற்சி பெறும்போது, குருமுகமாகக் கற்றறிவர். பின்னர் அவர்கள் அவற்றைப் பிழைகளின்றி, ச்ரத்தையுடன் ப்ரயோகிக்கும்போது, கிரியைகளைச் சூழ்ந்து வரும் மந்திரங்களின் பலன்கள் பூரணமாக ஸித்தியாகின்றன. முத்திரைகள் வெறும் அங்க சேஷ்டைகள் அல்ல; அவை பொருள் பொதிந்தவை; கிரியைகளுக்கு பூரணத்துவத்தை அளிப்பவை.

நல்ல செயல்முறைகளுக்குத் தந்த்ரங்கள் என்று பெயர். மந்திரங்களை உபயோகித்து பூஜை செய்யும் விதி முறைகளும் தந்த்ரங்களே. அத்தந்த்ரங்கள் எழுதப்பட்டுள்ள நூல்களையும் தந்த்ரங்கள் என்றே அழைப்பர். ஆகமங்கள் அனைத்தும் அத்தகு தந்த்ர நூல்களே.

வேதங்களில் ஓம் என்ற ப்ரணவமும், ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வெளஷட், வேட், வாத் முதலிய மந்திரங்களும், பூ; புவ; ஸுவ; என்னும் வ்யாஹ்ருதிகளும் முதல் முதலாகக் கூறப்படுகின்றன. பிற்காலத்துத் தந்த்ர சாஸ்திரங்களில் ஹம், ஹாம், ஹும், ஹூம், ஹ்ரீம், ஹ்ராம், ஹ்ரோம், ஸ்ரீம், ஐம், ஏம், க்லீம், பட் முதலிய ஒலிச் சேர்க்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் மந்திர சக்தி வாயந்தவை. இவற்றை ஆகம நூல்கள் பீஜாக்ஷரங்கள் என்று பெயரிட்டு திருக்கோவில் கிரியைகளுக்குப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. பூஜா மந்திரங்களை முறைப்படி குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, பீஜாக்ஷர மந்திரங்களின் ப்ரயோகமும் கற்றுத் தரப்படும்.

யந்த்ரம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி, ஒரு செயல் புரிகையில் அதற்குப் பயன்படுத்தப்படும் கருவி, சாதாரண அறிவுக்கெட்ட சக்தியைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சாதனம் என்றெல்லாம் பொருள் காணப்படுகிறது. எனவே மந்திரங்களின் மூலம் பூஜா விதிகளைக் கூறும் தந்த்ர நூல்கள், யந்த்ரங்களின் விவரங்களையும், அவற்றை உபயோகிக்க வேண்டிய முறைகளையும் கூட வெளியிடுகின்றன. மந்திரங்களை ப்ரயோகித்துப் பலனடைய உதவும் தந்த்ரங்களாம் முத்திரைகமைச் சரியாக உபயோகிப்பதால், அம்மந்திரங்களுக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றனர் என்பதும், முத்திரைகள் காட்டும்போது அவை யந்த்ரங்களோடு சம்மபந்தப்பட்டிருந்தால், அந்த யந்திரங்கள் தாங்கியுள்ள, தாங்க வேண்டிய, சக்திக்கான தேவதைகளும் திருப்தி அடைவது உறுதி.

முத்திரைகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. பெரும்பாலான முத்திரைகள் அப்போது ஓதப்பட்டுக்கொண்டிருக்கும் மந்திரச் சொற்களின் பொருளையும், வழிபாட்டு உபாங்கத்தையும் அனுசரித்தே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நடைபெறும் சிவ பூஜா கிரியைகளை, மந்திரங்களின் வாயிலாக அறிய முடியாதவர்களும்கூட, முத்திரைகளைக் கண்ணுற்று, அவற்றை ஊகித்து உணரலாம்.

சிவாலயங்களில் பயன்படுத்தப்பெறும் பல்வகையான முத்திரைகளில் சில, தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முத்திரைகளின் சித்திரத்தைக் வைத்துக்கொண்டு, அவற்றில் பயிற்சியற்றோர் தேர்ச்சி பெறலாம் என்ற நோக்கில் அவை இங்கு சேர்க்கப்படவில்லை ! முத்திரைகளை பூஜா விதிகளோடு சேர்த்து, குரு மூலமாகத்தான் கற்றறிய வேண்டும்; அச்சிலேறி வருவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு முத்திரைகளை ப்ரயோகிக்க இயலாது; ப்ரயோகித்தாலும் அவை பலன் தராதென்பதோடுகூட, அவ்வழி பெரும் தவறுங்கூட. இந்த புத்தகத்தில் காணப்படும் முத்திரைகளின் படங்களும் விளக்கமும், ஆலய வழிபாட்டிற்குச் செல்வோர், சிவாச்சாரியார் செய்யும் கிரியைகளின் பொருளை, முக்கியத்துவத்தை, உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே அச்சேறி வருகின்றன.
 -தொடரும்
ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்

  Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றிநண்பரே

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms