வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, September 2, 2016

முதல்வனே !

விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவேஎன்கிறார்.

கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?

சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.

கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.

கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.

பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால் அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. (விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர்  இயற்றினார்.)

வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங்கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.

ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.
ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)
கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.
கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.
லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.
விகடன்- குள்ளமாக இருப்பவர்.
விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.
விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.
தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.
கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.
பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.
கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.
வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.
கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.
ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.
ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.

இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.

ஒருசமயம் ஔவையார் கணபதி பூஜை செய்துகொண்டிருந்தபோது சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைப் பார்த்தார். உடனே தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பூஜை செய்தார். அப்போது விநாயகர் நிதானமாகவே பூஜை செய்யுங்கள்என்றார். அதன்படி ஔவை, விநாயகர் அகவல் பாடி கணேசனைப் பூஜித்தார். அடுத்த கணம், சுந்தரர் கயிலை அடையும் முன்னரே ஔவையை கொண்டுபோய் சேர்த்துவிட்டார் விநாயகர். அத்த கைய விநாயகர் அகவலின் சில வரிகளைக் காண்போம்

எல்லையில்லா ஆனந்த மளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத் துள்ளே சதாசிவம் காட்டி
சித்தத் துள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய்
அப்பாலுக் கப்பாலாய்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுஅக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

அருணகிரியார் தம் திருப்புகழில் ஆனைமுகனை எவ்வாறு துதிக்கிறார் என்று காண்போம்

உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகி பலகாலும்
எந்தனுக் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

வள்ளி கந்தனை அணைந்திட வள்ளி மலைக்கு வந்த ஐந்துகர விநாயகனே! தந்தையை வலம்வந்து கனி பெற்றவனே! உன்னை வணங்கும் அன்பர்களுக்கு நிலைப்பொருளாக  விளங்கி, தேவலோகத்து கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி போன்று கேட்பனவற்றையெல்லாம் தந்து மகிழச் செய்பவனே என்று போற்றுகிறார் அருணகிரி.

தமிழில் கந்தபுராணம்செய்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவருக்கு திகடச் சக்கரஎன அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன். தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம் கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது  முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற் றம் செய்ய முனைந் தார் கச்சியப்பர்.
முதல் பாடலான-

திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம்  போற்றுவாம்

என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், “திகடச் சக்கரஎன்பது இலக்கணப்பிழை என்றார். அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்கணப் பிழையென்கிறார்
களேநான் என் செய்வேன்…’ என்று மனமுருகினார். கந்தன் யாமிருக்கப் பயமேன்என்றான்.

மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி திகடச்சக்கரஎன்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார்.

திகடச்சக்கரஎன்பது திகழ் தசக்கரஎன்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.

ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா! ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா! அழகன் அண்ணா கணேஸ்வரா! ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா! பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா! என்றும் மங்களம் கணேஸ்வரா! 

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms